கராச்சி : கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகள் ஒன்றிணைந்துள்ளது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் நிலையிலும் மதரீதியில் பாகுபாடு காட்டுவதற்கு பாகிஸ்தான் முன்னுரிமை அளித்து வருகிறது. கொரோனாவால் நாடு முடக்கப்பட்டதால், உணவு உள்ளிட்ட அத்யாவசிய பொருட்களை கிடைக்காமல் அவதிப்படும் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு பாகுபாடு காட்டும் அந்நாட்டு அதிகாரிகள், பெரும்பான்மையிருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானையும் மிரட்டி வருகிறது. 2,042 பேர் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அந்நாடு முடக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில், தினக்கூலி தொழிலாளர்களுக்கு தொண்டு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகள் சார்பில் உணவு பொருட்களை விநியோகம் செய்ய சிந்து மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அங்கு வசிக்கும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு உணவு மற்றும் அத்யாவசிய பொருட்கள் கிடைப்பது இல்லை என புகார் எழுந்துள்ளது. கராச்சியில் உள்ள லியாரி சச்சல் கோத் உள்ளிட்ட பகுதிகளிலும், சிந்து மாகாணத்தில் வசிப்பவர்கள், தங்களுக்கு ரேசன் பொருட்கள் கிடைப்பது இல்லை எனவும், இதற்கு இந்துக்கள் என அதிகாரிகள் காரணம் கூறுவதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இந்து மதத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், ஊரடங்கு நேரத்தில் அதிகாரிகள் எங்களுக்கு உதவி செய்ய மறுக்கின்றனர். நாங்கள் சிறுபான்மையினத்தவர் எனக்கூறி ரேஷன் பொருட்களை தர மறுக்கின்றனர் எனக்கூறினார்.
உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காதவர்கள், கராச்சி நகரில், ஊரடங்கு உத்தரவு காரணமாக மூடப்பட்ட கடைகள் முன் காத்திருக்கின்றனர். ஆனால், இருக்கும் உணவு பொருட்கள் முஸ்லீம்களுக்கு மட்டும் தான் எனக்கூறி, இந்து சமுதாயத்தை சேர்ந்தவர்களை அங்கிருந்து கிளம்பி செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.