புதுடில்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக, ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கு, ரூ.4,500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என சந்தை ஆராய்ச்சி நிறுவனமான பாரஸ்டர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள் தவிர பிறவற்றை விற்பனை செய்ய, தடை உள்ளதால், வீட்டு உபயோகப் பொருட்களான டிவி, பிரிட்ஜ், ஸ்மார்ட் போன், ஆடைகள் போன்றவற்றின் விற்பனை முற்றிலுமாக நின்று போனது. ஆன்லைன் வணிக நிறுவனங்களின் வருவாயில் 70 சதவீதம் இப்பொருட்களின் விற்பனையை சார்ந்தே உள்ளதால், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ரூ.3,040 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டில் இந்திய ஆன்லைன் வணிக துறையின் மதிப்பு, 33.5 பில்லியன் டாலராக இருந்தது. 2020-ம் ஆண்டு இது 26 சதவீதம் அளவுக்கு வளர்ச்சியடையும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கத்தால், ஆன்லைன் வணிக துறையின் வளர்ச்சி 20% சரிவடைந்து, வளர்ச்சி 5 சதவீதம் அளவிற்கு மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது.